......

அன்புடன் சோமன்.....

ஞாயிறு, 13 ஜூன், 2010

ஒரு பின்னூட்டத்தின் இட்ட கதை.

அது ஒரு இனிய பின்னூட்டம்.

பின்னூட்டத்தில் என்னய்யா ஒரு இனிமைன்னு யோசிப்பவர்களுக்கு.  
எனக்கு ரொம்ப நாளாய் பதிவு போடுவதில் ஒரு சுணக்கம் இருந்தது.
'என்னத்த பதிஞ்சி, ... என்னத்த எழுதி'  அப்படிங்கற மாதிரி... அப்புறம்
பொறுக்க மாட்டாமல் ஒரு நண்பருக்கு ஊட்டம் போடப்போக,  மனுஷன்
பிரவாகமாய் ஒரு கதை எழுதி,  திண்ணையில் போட்டு ஆஹான்னு
ஆயிடுச்சு.  கதைல  கடசீல "நன்றி:  சோமன்"  அப்படின்னு போட்டு
மானத்த வேற வாங்கிட்டார்.   ரொம்ப லஜ்ஜையா போச்சுன்னு
வச்சுக்குங்களேன்.   அத்தனை நண்பர்களும் என்னை அள்ளிக்கொண்டார்கள்
படிக்க சொன்னதற்கே.   சஞ்சய் சுப்பிரமணியம் உடனே அவர் பதிவில்
இட்டு சுட்டி விட்டார் போய் மொதல்ல படிங்கப்பான்னு...

இப்படி நாலு பேர் சந்தோஷப்படறாங்க அப்படின்னா 
கொரவளயைக்கூட நெறிச்சு இந்த ஆளை எழுதப்பண்ணிலாம்னு
தோணிச்சு... கொஞ்சம் நகைச்சுவை கலந்து கிள்ளிஉட்டேன். 
அதான்,  என்னையா இது ஒருநாள் குளிக்காட்டி என்னமோ மாதிரி இருக்கு
நேத்து குளிக்கல, என்னமோ மாதிரி இருந்திச்சு,   இன்னிக்கு குளிக்கல
என்னமோ மாதிரி இருக்கு,   அட...இந்த மாசம் பூரா என்னமோ மாதிரி
இருக்குன்னு ஒரு சின்ன பிட்.   எனக்கு ரொம்ப ஆசையாத்தோணின ஒரு
நகைச்சுவை...  மனுஷனுக்கு உடனே பத்தி இருக்க வேண்டும்.
கிழி கிழியென்று கிழித்து ஒரு தோரணம் கட்டிவிட்டார்.   

அட இவர் கதையை தொடங்கும்போது என்னமோ  கிச்சு கிச்சு
மூட்டற மாதிரி தான் ஆரம்பிக்கிறார்.    போகப்போக  மனுஷன்
 தாண்டவமாடுகிறார்.   அவலமும்,  அங்கதமும்,  சிறுமை கண்டு
சீறுவதும்,   பாசமும்,    குடும்ப நேசமும்,  போட்டியும் பொச்சரிப்புமான
சூழ்நிலையையும்  ஒரு வாழ்வு வாழ்ந்து விட்டு  நமக்கும் ஒரு வாய்
அள்ளித்தருகிறார்.

எழுத்துலகில் ஒரு மாலி'ன்னு சொல்லலாம்.  ஊற்றாய் பெருகும்
கற்பனை.  சத்தியமும், வாஞ்சையும், இறையுணர்வும், இன்னும் எந்த
நல்ல நம்பிக்கைகளையும் சிறுமைப்படுத்தாமல் பேனாவால்
எல்லா மனங்களையும் உழுது செல்கிறார்,,   சொல்கிறார்.  
அப்பனையும் பிள்ளையையும்   பத்தி சொல்லும்போதெல்லாம் மனம்.
நெகிழ்ந்து போகிறார்.   எழுத்துக்காரன் எப்பவும் பாதிதான் எழுதுகிறான்.
மீதி நாம்  உணர்ந்து சிலிர்க்க தூண்டுவது தான் சரியான எழுத்து.
சந்கீதத்திலும் அப்படித்தான்.    நம் கற்பனைக்கு சில பாடாந்தரங்கள் தான்
என்னையும் இழுத்துப்பாடு என்று தூண்டும்.   எனக்கென்னமோ
சீதேவி வாப்பான்னு அவர் எழுத ஆரம்பித்தாலே,  கண் நிறைகிறது. 
முந்தியெல்லாம் எப்போவாச்சும் ராணியில் ரம்சான் போது  ஒரு
முஸ்லிம் கதை வரும்..   பெயர்   நிக்காது மனசில்..  தாவி விடுவேன். 
இந்த ஆளை படித்த பிறகு தான் ஓடி ஓடி அந்த சொற்களை பொறுக்க
ஆரம்பித்தேன். 

இவரின் பக்கங்களை அனுபவிக்காதவர்கள் பாவம் செய்தவர்கள். 
போய்த்தான் பாருங்களேன்.    ஒரு நிஜமான எழுத்துக்காரனை. 
"ஆபிதீன் பக்கங்கள்."   பகுதிக்கு.  லிங்க் தரப்போறதில்லை. 
 
தேடிக்கண்டு கொல்வீர்.    (எழுத்துப்பிழை எல்லாம் இல்லை).
------------------------------------------------------------------------------------------------------------அன்புடன் சோமன். 

0 கருத்துகள்: