......

அன்புடன் சோமன்.....

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

வழக்கமாக சாதகம்  பண்ணுவதற்காகத்தான்  உக்காருவேன் . 


நாலு அல்லது ஐந்து எப்போது எழுந்து கொண்டாலும்,   ஸ்ருதி  சேர்ந்து லயித்து ராகம் பாட ஆரம்பிப்பதற்குள் 
விடிந்தே போகும்.    முந்தி வாத்தியார்  வீட்டில்  குருகுலமாக இருக்கும்போது,    வராண்டாவில் ஐந்தாறு பேர் 
சிஷ்ய  பசங்கள்  படுத்திருப்போம்.    எனக்கு  மட்டும்  எழுந்து  கொள்ளும்போதே   சுருதி   இருக்கும்.   கச்சேரி 
முதிர்ந்து வெகு நேரம் வரை  பேசிக்கொண்டிருந்து விட்டு படுத்திருப்போம்.  அதனால் தூங்கியதே நினைவில் 
இருக்காது.  அப்படியே  உக்கார்ந்து  கொள்ளுவேன்.  மனசில் அஹாரம்.  அசோகவனத்தில் மாதிரி அவனவன் 
திசையெல்லாம் அலங்கோலமாக   படுத்திருப்பான்கள்.   மாமி ரொம்ப சீக்கிரம் எழுந்து ஒரு நடை மெட்டியின் 
மெல்லிய ஒலியோடு நடந்து வந்து விட்டு "சித்த நாழி தான் தூங்கேண்டா"  என்றவாறு போய் காபிக்கு வெந்நீர் வைப்பார்கள்.  நானும் போய் சமையல் கட்டில் நின்று கொள்வேன்.   பரபரவென்று  தானே எல்லா வேலையும் செய்வார்கள்.   பக்கவாத்தியம், சிஷ்ய கோடிகள்,  மற்றவருமாக திடீர்  கூட்டம் சேரும்போது வெற்றுபாத்திரத்தில் தயிர் சாதம் பிரட்டும் வித்தை ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும்.  'இருக்குடா, இருக்குடா'  என்றவாறு பரிமாறிக்கொண்டே இருப்பார்கள்.  

'எப்போவாச்சும்,   சோமன்  தூங்கி  நீங்க  பாத்திருக்கீங்களா'  என்று   சொல்லியிருப்பார்கள்.   கொஞ்ச  நஞ்ச 
சோம்பேறித்தனமும்  அழிந்து போகும் நமக்கு.  ஒரு ஆப்பிள் பற்றி சொல்லும்போது கூட,   'சோமன் வாங்கி 
வருவான் பாரு'  என்று தான் சொல்லுவார்கள்.  வேலை வாங்கும் வித்தைஎன்றாலும்  அது  நம்மை இன்னும் 
கூர்மையாக்கிவிடும்.    எந்த பாட்டானாலும்   யார்  பாடினாலும்,  எங்க  கச்சேரி   கூட   மாமி   ஒரு   வார்த்தை 
சொல்லணும் என்று இருப்போம்.   'பொழைச்சுக்குவான்',    'ஞானமா பாடறான்',   'சாமர்த்தியம் போறாது'  
'பிக் சீரோ',   'ஒப்பிக்கறான்',     என்று அந்த ஓரிரு வார்த்தைகளில் உயிர் இருக்கும்.  


திருவையாறில்  பஞ்சரத்தினம்  பாடி  முடிந்து  அன்று மாலை சார் கச்சேரி.  எல்லாரும்  தஞ்சாவூர்  புறப்பட்டு 
விட்டார்கள்.    அங்கிருந்து  வண்டி  எட்டே காலுக்கு.  நான் இன்னும் வந்து சேரவில்லை.  இன்னும் கொஞ்சம்,
இன்னும் கொஞ்சம் என்று திருவையாற்றிலேயே  திரிந்து விட்டு வந்து கொண்டிருக்கிறேன்.   வாசலில் பெட்டி 
படுக்கை,  வாத்யங்கள் சகிதம்,  எல்லாரும்  என்  ஒருவனுக்காக   காத்து   இருக்கிறார்கள்.  பார்வையாலேயே 
சுட்டு   எரித்து   விட்டார்கள்.    மாமி   குறுக்கும்  நெடுக்குமாக  நடந்து  கொண்டே   திட்டித்தள்ளுகிறாள்.   
எல்லாரும்    ஓடிப்போய்  வண்டியில்  ஏற,  எங்க  சார்   அத்தனை   ரகளையிலும்  திட்டிக்கொண்டே  நகர்ந்து 
சமையல்  கட்டுக்கு  போய் தட்டில் சாதம் போட்டு பிசைந்து கொண்டு வந்தே விட்டார்.  'இந்தாடா!'  என்றவாறு. 
மாமி  அவரை  எரித்து விடுவது  ஒரு  பார்வை பார்த்தது இன்னும் பயமாக இருக்கிறது.  சத்தியமாக அப்போது 
கொலைப்பசி.  அழாத குறையாக  'பாவம்டி'  என்றவாறு  அவர்  ஊட்டிய சாதம் என் நெஞ்சில் நிற்கிறது.  
நாங்க எப்போவும் குரு பற்றிய சிந்தனையில் இருப்பதாலோ என்னவோ,  சார் எங்க யாரைப்பாத்தாலும்,  
அனிச்சையாகவே,   ' சாப்பிட்டியோ நீ,   சாப்பிட்டியோ என்று  கேட்டுக்கொண்டிருப்பது வழக்கம்.  


அய்யங்கார் வீட்டில் எங்க சார் இருந்த சமயம்,  வழக்கமாக  சிஷ்ய பசங்களுக்கு தனிப்பட்ட பாடம் என்று 
ஒன்று அறவே கிடையாது,   தனம்மாளுக்கு  மட்டும் தனியாக சொல்லித்தருவார். தப்பு தப்பாய் அது 
பாடினாலும் வாஞ்சையாக சொல்லித்தருவார்.   அதை வெளியில் நின்று  கேட்டுக்கொண்டு   இருப்பதே 
சிட்சை.  சில நேரம் அதிலும் மண் விழும்.  அந்த நேரம் எதாச்சும் வெளியில் போக வைப்பார்களாம்.  
வெங்கடா ஓட்டல் என்று பிரத்யேகமாக.   அங்கிருந்து இட்லி வாங்கி வருவது ஒரு சிஷ்யன் வேலை.  
பசங்களுக்குள் ஒரு ஒப்பந்தம்.  அவ்வளவு தூரம் நடந்து போய்  நேரம் வீணாக்க விரும்பாமல் பக்கத்து 
கையேந்தி பவன் கிழவிடம் தொடர்ந்து வாங்கி வழங்கி வந்திருக்கிறார்கள் ரொம்ப நாளாய்.  மிச்சம் பிடித்த 
நேரத்தில் உடனே உள்ளே போகாமல் இருந்து பாடமும் கேட்டுக்கொண்டு ஜில்லோவென்று வண்டி ஓடி 
இருக்கிறது கொஞ்ச காலம்.  

திடீரென்று வழக்கமாய் வாங்கி வரும் ப்ரஹஸ்பதி சொந்த ஊருக்கு புறப்பட்டு போக,   இந்த சதியெல்லாம் 
அறியாத புது சிஷ்யன்,   ரொம்ப அக்கறையாக   வேங்கடாவில்  இருந்து வாங்கி வந்து வைத்து விட்டான்.  
அய்யங்கார்வாள்  அனுஷ்ட்டானம்  எல்லாம் முடிந்து  சமர்த்தாக  உக்கார்ந்து சாப்பிடப்போனால் வாயில் 
வைக்க வழங்கவில்லை.  தூக்கி அடித்து விட்டாராம்,  "என்னடா எழவு இது, சகிக்கலை,  கூப்பிடு அவனை."
வழக்கமா இருக்கற மாதிரி இல்லையேடா,  எங்க வாங்கி ஒழிந்தாய்"  என்று.  கடைசியில்  விசாரித்ததில்  
கிழவி ஆஜர்,  'நாந்தாஞ்சாமி  தெனோம் தரேன் ஒனக்கு,  இன்னிக்கு தான் புள்ளிங்க வரலைன்னு நானே 
கொண்டாந்தே' ன்னு  ஒப்பித்து விட்டாள்.
   .