......

அன்புடன் சோமன்.....

வியாழன், 6 ஜனவரி, 2011

இந்த  வருடத்தின்  இசை  விழாக்கள்  எல்லாம்  கோலாகலமாக   நடந்தேறின.
தொண்டை கட்டும் வரை அல்லது  காத்து  மட்டும் தான் வருது என்று சொல்லும் வரை கச்சேரி ஒப்புக்கொண்டு 
எல்லாரும் பாடித்தள்ளினார்கள்.   எழுதுவதற்கும் இலக்கிய தரமுடன்  எந்த ஒரு நல்ல விமர்சகரும் இல்லை.
எழுதுகிற  ஒன்றிரண்டு  பேர்வழிகளும் வித்வான்  அந்த ராகத்தை எடுத்துக்கொண்டார்,   இந்த ராகத்தை கையாண்டார்,  
உச்ச ஸ்தாயியில் நட்டமாக நின்றார்,   நிரவலில் புகுந்தார்,   நிழல் போல தொடர்ந்தார்,  அனுசரணையாக 
வாசித்தார்,  இப்படி கடனே என்று  விமர்சனம் எழுதுகிறார்கள்.  வரிசையாக  அவர் பாடியதை எழுதாவிட்டால்
தான் கச்சேரியை முழுதும் பார்க்காமலே எழுதிவிட்டோம்  என்று தப்பாக  ஆகிவிடக்கூடாது என்று தான்.  
வேடிக்கை  என்ன என்றால்  இப்படி நீட்டி முழக்கி எழதிய ஒரு கச்சேரி ஏற்கெனவே கேன்சல் ஆகி இருந்தது. 


இந்த  சீசனின்  அசுரத்தனமான   ஒரு   கச்சேரி   பாலக்காடு   ரகுவின்   பேரன்   அகாடமியில் பாடியதை 
சொல்ல வேண்டும்.  அந்த தோடியின் போது  'ஹே'  என்று ஒரு ஆரவாரம்.  எல்லாரும் எழுந்து நின்று  
கரகோஷம் செய்தார்கள்  ஒரு செஞ்சுரி அடித்தது போல.  முப்பது வருடங்களில் இப்படி ஒரு வேகமான சங்கீதம் 
ரசிகர்கள்   கேட்டதில்லை.   நல்ல  தாளக்கட்டும்   ஸ்வர  நிர்ணயமும் இருந்தால் மனோதர்மம்  பிய்த்துக்கொண்டு வரும் என்பது சரிதான்.  பையன்  கஞ்சிரா,  தாத்தன்  மணியின் வம்சம்.  கணக்கு வழக்கு சரி.  ஆனால் அந்த தோடியை இழுத்த இழுப்பில் கச்சேரி   முக்கால் மணி  தள்ளி போனதை  துளியும்  பொருட்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.   அகாடமியில்  ஆளாளுக்கு குறிப்பு அனுப்பியும்  பலனில்லை.  வாசு இருந்திருந்தால்  இன்னொரு முறை  பிரஷ்ஷரில் போய்  இருப்பார்.   விடிந்ததும்  ஹிந்து-வில்  கிழி கிழியென்று கிழித்தார்கள்.      வேறென்ன செய்ய.



வேந்தும் வேகாத இசை மழலைக்கூட்டம் எல்லாம் இந்த வருடம் மதியக்கச்சேரியில்  புகுந்து விட்டன.  
பத்துக்கு ஒண்ணு பழுதில்லை.    எனன செய்ய வேணும்  சங்கீதத்தில் என்பது பற்றிய  தெளிவு இல்லை.
கற்பனை பிரவாகமாகமாக வரவேண்டியதை மனப்பாடம் பண்ணிக்கொண்டும்,   கீர்த்தனை  வடிவங்களை 
இஷ்டமாக  கற்பனை செய்து பாடிக்கொண்டும் திரிகிறதுகள்.  



சின்ன வயதில் நானும் ராஜேந்திரனும் கச்சேரி கேட்டு பேசிக்கொண்டிருந்துவிட்டு  பிரிய மனமில்லாமல்
பிரிவோம்.  என் வீடுவரை நடந்து அவன் வர,  திரும்ப அவன் வீடுவரை நான் போய்விட,  அப்புறம்  அந்த 
முக்குவரை  வரேன் என்று வருவான்,  நான் அந்த ரோடு வரை வரேன் என்று போவேன்  இப்படியாக  
விடிந்ததே போகும்.   சூழல் சீர்கேடு என்பது எல்லா இடத்திலும் இருப்பது போல இசையுலகிலும் இருக்கிறது.  
நல்ல இசையுடன் முதலில் பரிச்சயம் வேண்டும். அது இந்தமாதிரி நல்ல விழாக்கள் வரும்போது 
தான் சாத்தியமாகிறது.  அதென்னமோ  சென்னையின் சாபக்கேடு  ஒரு நல்ல டீ' க்கு நாயாய் அலைய  
வேண்டும்.   இருக்கும் எல்லா கடையும்  மலையாளத்தான் குத்தகைக்கு எடுத்த பிறகு,    
புளியங்கொட்டை தூள் தான் சாஸ்வதம் என்று ஆகி விட்டது.  சங்கீதம் கூட அது போல ஆகி விட்டது 
அவன் தான் இங்கயும்  கொட்டையைப்பரத்திக்கொண்டு இருக்கிறான்.  எனன செய்ய.? 


அப்புறம் வந்து மிச்சத்தை எழுதுகிறேன்..  ஆபிதீனுக்கு ஒரு பின்னூட்டம் போடணும்.  

அன்புடன் சோமன். 
---------------------------------

0 கருத்துகள்: