......

அன்புடன் சோமன்.....

வெள்ளி, 31 டிசம்பர், 2010

கன்னம் கிள்ளி,    கொஞ்சம்  கொஞ்சமாய் காதல் சொல்லி,  ஓரமாய் அழைத்து வந்து,  பேசிப்பேசி பழகி, 
பழக்கி,  ஒருவழியாக  இன்னைக்கு ஒத்தடம் பண்ணி விடலாம்  என்று  முகம் முனைவதற்குள்  
சரேலென்று   "அய்யயோ,   யாரோ பாக்கறாங்க"  என்றவாறு  ஒரே  ஓட்டமாய் ஓடிப்போகும் 
புத்தம் புதுக்காதலி போல  இந்த  எழுத்தும்  கவிதையும் என்னை பாடாய்ப்படுத்துகிறது.   

இடுப்பில்   இருந்து   இறங்க   மறுக்கும்   குழந்தை போல   நினைவுகளும்  மனசில்
என்னை எப்போது எழுதப்போகிறாய் என்று சிணுங்குகிறது
 
அவள் இருந்த இடமும்,   மனமும்,  வாசமும்  கொஞ்சமாய் இருக்க,    மிச்சத்தை  என் கற்பனைகளால் 
தொடுக்க முனைகிறேன்... எப்போவும்,   எழுது எழுது என்று தோணும்போதெல்லாம்  வசப்படுவதில்லை
இந்த மனசு.   மாட்டேன் என்று  வெறுமையாய் விடுகிறது.   யோசிக்கும் போது,   எழுத்தும்,  உணர்வும்,  
புத்தியும்,  மனசும் போலத்தான் என்று படுகிறது,   

எழுதும்போதெல்லாம்  எதையாவது அறிவு சொல்லவோ,  ஆதங்கப்படவோ ஆரம்பித்து  
திசை திரும்பி விடுகிறது.    இனி  நிறைய எழுத உத்தேசித்து இருக்கிறேன்.    இசை   விழா  
மழையில்   நனைந்து,   தோய்ந்து,   திளைத்த காதுகளுக்கு   இந்த  இரவு தான்  உச்சக்கட்டம்.   
அதாவது,    அகாடமியின்    கடைசிக்கச்சேரி    ஹிந்துஸ்தானி    சரோட்  விருந்துடன்   சீசன் 
முடிந்து சங்கீதம் அள்ளிக்கொண்டு  திரும்பி விட்டேன்.   முன்பெல்லாம் பண்டிட் ரவி ஷங்கர்
போன்ற மாமேதைகள்   நீள் இரவுகளில்  எங்களோடு  புத்தாண்டு  வாழ்த்துகள்  சொல்லும் அழகு 
கண்ணில் இருக்கிறது!    

ஒரு புது பட்டாம்பூச்சி போல மனமெல்லாம் சுற்றி ஒரு இடம் நிற்காமல் அலையும் என் 
தோழியையும்  பற்றி எழுதணும்...   எழுதிக்கொண்டு இருக்கிறேன்.. 


அன்புடன் சோமன்.  
--------------------------------=


 

0 கருத்துகள்: